தொடர் தோல்விகளால் துவண்டுபோன கௌதம் மேனனுக்கு கை கொடுத்த அஜித்தை நினைத்து பெருமைப்படுவதா, கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினாரா இல்லையா என்று யோசிப்பதா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் அஜித், அதே விமானத்தில் அனுஷ்காவும் வருகிறார். விமானப் பயணம் முதல் முறை என்பதால் அனுஷ்காவும் லைட்டா பிசிரு கிளம்ப அவருக்கு அருகில் அஜித் கூலாக கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கிறார். நம்முடன் வரு சக பயணியிடம் பேசிக் கொண்டே போனால் நேரம் போவது தெரியாது என்பதுமாதிரி அஜித்திடம் பேச்சு கொடுக்கிறார் அனுஷ்கா, இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே இவர்கள் இந்தியா வந்தடைகிறார்கள்.
விமானத்திலிருந்து இறங்கிய அஜித் அவர் வழியை பார்த்து கொண்டு அனுஷ்காவை கண்டுகொள்ளாமல் போகிறார். ஆனால் அஜித்தை பின் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேச்சு கொடுக்கிறார், பின் இவர்கள் இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்க. இவர்கள் சந்திக்கும் அந்த காஃபி ஷாப்பில் அனுஷ்காவை கடத்த முயற்சிகள் நடக்கிறது இதில் அஜித் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அனுஷ்கா அஜித்திடம் அவர்கள் யார் ஏன் உங்களை கொல்ல முயற்சி செய்தார்கள் என்று கேட்க, அதற்கு அஜித் அவங்க என்னை கொல்ல வரல உன்ன கடத்திட்டு போக வந்திருந்தாங்க என்று கூறுகிறார், கடத்த வந்தவர்கள் யார் என்ற கேள்வியோடு படத்தின் ப்ளாஷ்பேக் ஆரம்பமாகிறது.
சிறு வயதில் தன் தந்தை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அஜித்தின் மனதில் இனி கேங்ஸ்டர்களை கொல்வதே என் நோக்கம் என்று போலீஸ் அதிகாரியாக மாறி ஒவ்வொரு ரவுடி கூட்டத்தின் தலைவனையும் போட்டுத்தள்ளிக் கொண்டே வருகிறார், ரவுடிகளின் ராஜ்ஜியத்தை சில்லி சில்லியாக்கும் இவர் ஒரு கட்டத்தில் ரவுடி கூட்டத்தில் வேலை பார்க்கும் அருண் விஜய்யுடன் நட்பு கொள்கிறார். இவர்களது நட்பு மூழ்காமல் சென்று கொண்டிருக்கும்போதுதான் இன்னொரு உண்மை தெரியவருகிறது அருண் விஜய்க்கு, அஜித் தன்னுடன் பழகுவதே தன் கும்பலை அழிப்பதற்காகத்தான் என்று தெரிந்ததும் அவரை போட்டுத்தள்ள பார்க்கிறார். இதில் அஜித் அருண் விஜய்யின் கும்பலை போட்டு தள்ளிவிடுகிறார், ஆனால் இந்த அடிதடியில் அருண் விஜய் எப்படியோ எஸ்கேப் ஆகிவிடுகிறார். பின் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிறார் அஜித், இதனிடையே த்ரிஷா மீது காதல் வயப்படுகிறார், இவர்களது காதல் விண்ணைத்தாண்டி செல்லும் நேரத்தில் மீண்டும் அருண் விஜய் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிட்டு த்ரிஷாவை போட்டுத்தள்ளுகிறார்.
த்ரிஷா இறந்ததால் இனி தன் குழந்தையுடன் இந்த போலீஸ் வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு போய்விடுகிறார். குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இனி எந்த அடிதடியும் வேண்டாம் என்று இருக்கும் இவரைத்தான் அந்த கும்பல் காஃபி ஷாப்பில் போட்டுத்தள்ள வந்துள்ளது, தன்னை யார் கொல்ல துடிப்பது என்று தெரியாமலிருக்கும் அஜித்திற்கு அருண் விஜய் தான் இதெல்லாம் செய்கிறார் என்று விளங்கிவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு கடத்தல் கேஸை அஜித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று மீண்டும் அஜித்தை போலீஸ் வேலையில் சேர்க்க முயல்கிறது, ஆனால் தான் மீண்டும் போலீஸ் வேலையில் சேருவதாக இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிடுகிறார். ஒருகட்டத்தில் அந்த கடத்தல் வழக்கில் அருண் விஜய் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர அஜித் மீண்டும் போலீஸ் வேலையில் இணைந்தாரா? அருண் விஜய்யால் கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டாரா? தன் பகையை தீர்த்துக் கொண்டாரா என்பதே க்ளைமேக்ஸ்.
ஆரம்பம், வீரம் என இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதையை தேர்வு செய்த அஜித் இந்த படத்தின் கதையை கேட்காமலே நடித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் அஜித்தின் ஸ்டைலும், அவரின் ஆக்ஷன் காட்சிகளையும் பார்க்கும்போது தல தல தான் என்று நம்மை அறியாமலே நம்மை முனுமுனுக்க வைத்துவிடுகிறார்.
அருண் விஜய் ஆக்ஷன் கதைகளுக்கு பொருத்தமாக இருப்பார் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்துவார் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள், கௌதம் மேனனுக்கு தான் நன்றி சொல்லனும், இளம் கதாநாயகர்களை வில்லன்களாக்கும் டிரண்ட் தற்போது கோலிவுட்டிலும் பெருகுவது நன்றாகவே தெரிகிறது. வாழ்த்துகள் அருண் விஜய்.
அனுஷ்காவும், த்ரிஷாவும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்திருப்பது படத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. த்ரிஷாவிற்கு படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் இவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது, இருக்காதா பின்னே கௌதம் மேனனின் அபிமான நாயகியாகிவிட்டாரே த்ரிஷா தான். அனுஷ்காவின் கதாபாத்திரமும் பேசும்படிதான் இருக்கிறது.
காமெடிக்கு விவேக், கிரீடம் படத்திற்கு அஜித்துடன் இணைந்துள்ளதால் புதுவிதமான பஞ்ச் மற்றும் மக்களுக்கு கருத்து சொல்வதில் எந்த தவறும் செய்துவிடவில்லை பத்மஸ்ரீ விவேக்.
இசை ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் என்று சொல்லமுடியாது, “வா ராஜா வா வா” “மழை வரும்போது” இரண்டுமே சூப்பராக இருக்கிறது, பின்னணியில் மட்டும் இசையமைப்பாளர்களை அடித்துக் கொள்ள முடியாதுபோல 7 வருட பிரிவிற்கு பிறகு கௌதம் மேனன் படம் என்பதால் கூடுதல் கவனம் எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது ஹாரிஸ். ஒளிப்பதிவிலும் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்தியிருக்கிறார் டான் மெக்கத்தூர்.
சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா அஜித்தின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டராகவிட்ட சில்வா இந்த படத்திலும் அசத்தியிருக்கிறார், காஃபி ஷாப் சண்டை, பின்னி மீலில் நடக்கும் கேங் வார், ஜெயில் அருண் விஜய்யின் சண்டை காட்சி என ஆக்ஷன் பிரியர்களின் கண்ணுக்கு விருந்தாக்கியுள்ளார்.
மொத்தத்தில் என்னை அறிந்தால் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் விருந்து...!